நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு
தேனி,அக்.13- நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவினர் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் மற்றும் அவர்களது தந்தையர் கைது செய்யப்பட்டு,நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவியும் அவரது தாயார் மைனாவதியும் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு, ஜாமீன் மனு மீதான விசாரணை போன்றவற்றிற்காக சிபிசிஐடிபோலீசார் ஆஜரான போது தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பிடிபட்ட மாணவர்களின் கல்விச் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சரிபார்த்த குழுவினரிடம் ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியது.
இதனையடுத்து ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவினரும் தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் சென்னை சத்யசாயி, எஸ்ஆர்எம் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், அலுவலர்களும் தேனி சிபிசிஐடி.அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இவர்களிடம் ஆய்வாளர் சித்ராதேவி 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். இதில் கல்லூரி சேர்க்கையின் போது சான்றிதழ்கள் சரிபார்ப்பதற்கான விதிமுறைகள், இப்பணியின் போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் சானறிதழ்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்ததா, சான்றிதழ் சரிபார்ப்பில் மற்றவர்களின் தலையீடு இருந்ததா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தடுத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர் குறித்த விபரமும் தெரிய வந்தது. ஆனால் இந்த வழக்கு சமீபகாலமாக தேக்கநிலையிலே உள்ளது. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்கள், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இடைத்தரகர்கள் ரஷீத், வேதாசலம் ஆகியோரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.